வலங்கைமான், ஜூலை 23: குடவாசல் அருகே சரபோஜி ராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. இந்த கல்வியாண்டிற்கான வானவில் மன்ற கருத்தாளராக வாணிபிரியா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அரசு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு அறிவியல் சோதனைகளை செய்து காட்ட வானவில் மன்றம் சரபோஜி ராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தொடங்கியது. குடவாசல் வட்டார கல்வி அலுவலர் விமலா தலைமையில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பூபாலன் தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய செயலாளர் கஞ்சமலை குடவாசல் ஒன்றிய பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் தலைமை ஆசிரியர் பாலச்சந்தர் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் விமலா அவர்கள் அனைத்து மாணவர்களும் அறிவியல் சார்ந்த போட்டிகளான வினாடி வினா திறனறிதல் தேர்வு ஆய்வு கட்டுரைகள் முதலிய போட்டிகளில் அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு தங்களின் திறன்களை மேம்படுத்த கேட்டுக்கொண்டார். உறுதுணையாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவ மாணவிகளின் செயல்பாடுகளை ஊக்குவித்து வழிநடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க குடவாசல் ஒன்றிய செயலாளர் கஞ்சமலை அவர்கள் விரைவில் மாணவ மாணவிகளுக்கான போட்டிகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் அறிவிக்கப்பட இருப்பதாகவும் தங்களது முழு திறனையும் இப் போட்டிகளில் வெளிப்படுத்தி வெற்றி பெற வானவில் மன்றம் ஒரு கருவியாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். குடவாசல் ஒன்றிய பொருளாளர்ரவி பிரபாகரன் நன்றி கூறினார்.