திருச்சி, ஆக.28: திருச்சியில் நகை கடையில் ஷட்டரை உடைத்து 400 கிராம் வெள்ளி திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மேலசிந்தாமணி காவேரி நகரை சேர்ந்தவர் ரவி (55). இவர், கடந்த 22ம் தேதி இரவு நகைப் பட்டறையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் (23ம் தேதி) வந்து பார்த்த போது, மர்ம நபர்கள் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று 400 கிராம் வெள்ளியை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, திருச்சியை சேர்ந்த சதாம் உசேன் (27), காஜாபேட்டையை சேர்ந்த முகிலன் (19), அரியமங்கலம் உக்கடையை சேர்ந்த ஜோதி (25) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 190 கிராம் வெள்ளியை போலீசார் பறிமுதல் செய்தனர்.



