திருச்சி, ஆக.28: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் முதியவரை தாக்கி பணம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம், துறையூர் தென்புறநாடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (55). இவர், கடந்த 25ம் தேதி டிரவுசர் பையில் ரூ.20,000 பணத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள மகள் சசிகலா, பேத்தி ஆகியோரை பார்க்க துறையூரிலிருந்து புறப்பட்டார்.
திருச்சி சத்திரம் பஸ்நிலையம் வந்தவர் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு வாடகை ஆட்டோவில் செல்லலாம் என்று எண்ணியவர், அதற்கு முன்பாக டிரவுசர் பையிலிருந்து பணத்தை எடுத்து கைப்பையில் வைத்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 நபர்கள் திடீரென, முதியவரை சரமாரியாக தாக்கிவிட்டு ரூ.20,000த்தை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



