திருச்சி, ஆக.26:திருச்சியில் ஆன்லைன் மூலம் ரூ.1.20 லட்சம் மோசடி செய்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி கிராப்பட்டி பாரதி நகரைச் சேர்ந்தவர் அப்துல்ரஹீம் (31). இவரிடம் ஆக.19ம் தேதி மர்ம நபர் ஒருவர், செல்போனில் தொடர்பு கொண்டு தனியாா் வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறினார். பின்னர் உங்களது முடக்கப்பட்ட கிரெடிட் கார்டை மீண்டும் புதுப்பித்து தருவதாக கூறி ஒரு லிங்க் அனுப்பி உள்ளார்.
அதனை நம்பிய அப்துல்ரஹீம், மர்ம நபர் அனுப்பிய லிங்க் மூலம் ஒரு ஆப் பதிவிறக்கம் செய்து தனது கிரெடிட் கார்டு விவரங்களை பதிவேற்றியுள்ளார். சில நிமிடங்களில் அவரது கணக்கிலிருந்து ரூ.1.20 பணம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



