மணப்பாறை, செப், 11: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 4 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மணப்பாறையில் எல்.நினோ பருவகால மாற்றத்தால் கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் லேசாக மழை பெய்து வருகிறது. மணப்பாறையில் கடந்த 4 நாட்களுக்கு முன் திடீரென மாலை வேளையில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
சுமார் 2 மணி நேரம் நீடித்த மழை ஓரளவு பூமியை குளிர செய்தது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், போதிய மழை பொழிவு இல்லாததால் வெப்பத்தின் தாக்கமே மேலோங்கி இருந்தது. இந்நிலையில், நேற்று பகல் முழுவதும் வெப்பம் அதிகமாக இருந்து வந்தது. இரவு சுமார் 7.30 மணியளியில் இடி, மின்னலுடன் திடீரென கன மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


