துறையூர் கீழநடுவலூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை: காலிக்குடத்துடன் பெண்கள் திரண்டனர்
துறையூர், செப்.10: துறையூர் அருகே கீழ நடுவலூர் கிராமத்தில் குடிநீர் வேண்டி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது கீழநடுவலூர் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கீழநடுவர் கிராமத்தில் உள்ள கிழக்குத் தெரு மற்றும் தெற்கு தெரு பகுதிகளுக்கு கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் குடிநீரின்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளான அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் செய்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடிய விரைவில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் கீழநடுவலூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.


