திருவெறும்பூர், அக்.9: திருவெறும்பூர் அருகே புதுச்சேரி மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்ற தொழிலாளியை திருச்சி எஸ்பி தனி படை போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூர் பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்கப்படுவதாக திருச்சி எஸ்பியின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், திருவெறும்பூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (43)என்பவர் திருவெறும்பூர் பகுதியில் புதுச்சேரி மதுபான பாட்டில்களை வாங்கி வந்து கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு சில்லறை விற்பனை செய்வது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் பெல் நிறுவனத்தில் கடந்த ஆறு வருடமாக வீட்டு வேலை செய்து வருவதாகவும், அவ்வப்போது இது போல் புதுச்சேரியில் இருந்து மதுபான பாட்டில்களை வாங்கி வந்து கள்ள சந்தையில் விற்று வருவதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சுரேஷை கைது செய்ததோடு 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


