திருச்சி, அக்.9: திருச்சி தென்னூர் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியூ மின் ஊழியர்கள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக்கோரி போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், மின்விநியோகத்தை முழுமையாக தனியார் மயப்படுத்தும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும், மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை முழுமையாக கைவிட வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய முழக்கப் போராட்டம் நேற்று நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி தென்னூர் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பாக கோரிக்கை முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அப்போது, 12 மின்வாரிய மண்டலங்களில் அனைத்து பகுதி மக்களையும் பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் வைப்பதற்கு கோரப்பட்டுள்ள டெண்டரை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். பொதுத்துறையில் உள்ள மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை தமிழக அரசு முழுமையாக கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


