தா.பேட்டை, செப்.9: தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் தா.பேட்டையில் இருந்து முசிறி செல்லும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைத்தம்பாறை பிரிவு ரோடு அருகே வந்த மொபட் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது முசிறி தாலுகா தும்பலம் பகுதியை சேர்ந்த அபிஷேக் (26) என்பவர் அதே பகுதியை சேர்ந்த மணிகார்த்தி என்பவர் தொடர்பு கொண்டு நாமக்கலில் இருந்து லாரியில் புகையிலை பொருட்கள் வருவதாகவும், அதனை பச்சபெருமாள்பட்டிக்கு சென்று கொடுத்துவிட்டு வருமாறு கூறியதின் பேரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ22 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 15 கிலோ புகையிலை பொருட்களை கடைகளுக்கு சில்லறை வியாபாரம் செய்ய எடுத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை கொண்டு வந்த அபிஷேக்கை கைது செய்தும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


