Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குடும்பத்தகராறில் மாமியாரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை

திருச்சி, ஜூலை 31: திருச்சியில் மாமியாரை, மாறி மாறி கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட் நீதிபதி கிரிஸ்டோபர் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தார். திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகா் ஹாிணி நகர் சின்ன பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது சிராஜூதீன். இவர் மனைவி ஆயிஷா பீவி (25). சிராஜூதீன் தாய் சம்ஷாத் பேகம்(56). சிராஜூதீன் கவரிங் நகை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், ஆயிஷா பீவிக்கும் கடந்த 20.12.2020 அன்று திருமணம் நடந்தது. சிராஜூதீன் தங்கை அடிக்கடி தன் வீட்டிற்கு வந்து செல்வது ஆயிஷா பீவிக்கு பிடிக்காததால், திருமணமான சில மாதங்களிலேயே தனிக்குடித்தனம் செல்வதாக மாமியாருடன் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஏற்பட்ட ஒரு தகராறின்போது, மாமியார் மீது ஏறி அமர்ந்து அவர் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். இதன் காரணமாக சிராஜூதீன் மனைவியை விவகாரத்து செய்ய முடிவு செய்து, அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டார். ஆனால், அவர் தாய் சம்ஷாத் பேகம் மற்றும் ஆயிஷா பீவி குடும்பத்தினர் சமரசம் செய்து தம்பதியரை மீண்டும் சேர்த்து வைத்துள்ளனர். பிரச்சினைகளை ஓரளவாவது குறைப்பதற்காக சிராஜூதீன் ஒரு வீட்டை அவர் பெயரில் வாங்கியுள்ளார். அந்த வீட்டை தனது பெயரில் ஏன் வாங்கவில்லை எனக்கூறி ஆயிஷா பீவி மீண்டும் தகராறு செய்து வந்தார். 2024 ஜனவரியில் இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சிராஜூதீன் தனது தங்கைக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார்.

இதனை கண்டித்து ஆயிஷாபீவி கணவர் மற்றும் மாமியாரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது சிராஜூதீன் வீட்டை விட்டு வெளியே சென்றபோது, வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டதால் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஆயிஷா இரண்டு கைகளிலும் இரண்டு கத்திகளை வைத்துக்கொண்டு, மாமியார் மீது அமர்ந்து, தலை மற்றும் விலாப்பகுதியில் மாறி மாறி குத்தியதை கண்ட சிராஜூதீன் தன் குழந்தையை தூக்க முயற்சித்த போது, ஆயிஷா ஒரு பிளேடால் குழந்தையின் காலை கீறியுள்ளார். சிராஜூதீன், குழந்தையை பக்கத்து வீட்டை சேர்ந்த ரஹமத் நிஷாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அவரையும் கத்தியால் முதுகில் குத்தியுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தபோது ஆயிஷா மயங்கி சரிந்தார். உடன் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அவர்கள் பரிசோதனை செய்து, சம்சாத் பேகம் இறந்துவிட்டதாக கூறினர்.

பின்னர் ஆயிஷா, குழந்தை, ரஹமத் நிஷா ஆகியோரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் ஆயிஷா மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கின் வாத, பிரதிவாதங்கள் நிறைவுற்ற நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ஆயிஷா பீவிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால், மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஆனந்த் ஆஜரானார்.