Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மேட்டூர் அணை திறக்கப்படாததால் நிலத்தடி நீர்மட்டம் சரிவு: திருச்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

திருச்சி, ஜூலை 31: திருச்சி மாநகராட்சிக்கு நாள்தோறும் 15 எம்எல்டி தண்ணீர் தேவைப்படும் நிலையில் நடப்பாண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வழக்கமாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். அந்த நீர் விவசாயத்துக்கு மட்டுமின்றி காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் பாய்ந்தோடி நிலத்தடி நீரையும் உயர்த்துகிறது. இதனால் மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குடிநீர் ஆதாரத்தையும் பாதுகாப்பதுடன், ஆற்றுப்படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் முக்கிய காரணமாக அமைகிறது. ஆனால் நடப்பாண்டில் இதுவரை மேட்டூர் அணை திறக்கப்படாததால், திருச்சி மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் வறண்டு காணப்படுகின்றன.

மாநகராட்சிக்கு தற்போது நாளொன்றுக்கு சுமார் 15 மில்லியன் லிட்டர் (MLD) குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் 10.8 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். 1.20 லட்சம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. மக்களின் தேவையை பூர்த்தி செய்ய நாளொன்றுக்கு 165 எம்.எல்.டி. தண்ணீர் விநியோகிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது 149 முதல் 150 எம்.எல்.டி. மட்டுமே விநியோகிக்க முடிகிறது. இதுவும் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மாநகராட்சியின் 9 நீரேற்று நிலையங்கள் மூலம் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு நகரின் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது ஆறுகளில் போதிய நீரோட்டம் இல்லாததால் பல நீரேற்று நிலையங்களில் முழு திறனில் தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தற்போது குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனால் அது வழியில் பல்வேறு பயன்பாடுகளுக்கு பிறகு முக்கொம்பு பகுதிக்கு 90 முதல் 100 கனஅடி அளவிலேயே வந்து சேருவதாக கூறப்படுகிறது. இதனால் திருச்சி மாநகரின் குடிநீர் ஆதாரம் தொடர்ந்து சுருங்கி வருகிறது.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீரோட்டம் இல்லாததால் ஆற்றுப்படுகைகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது. இதனால் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. திருச்சி நகரில் கோடை காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 14 மீட்டர் ஆழம் வரை கீழிறங்குவதாகவும், வடகிழக்கு பருவமழைக்கு பிறகு மட்டுமே மீண்டும் உயர்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்மை மற்றும் அதிகளவிலான நிலத்தடி நீர் உறிஞ்சல் காரணமாக முன் பருவமழை மற்றும் பின் பருவமழை காலங்களிலான நிலத்தடி நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மத்திய நிலத்தடி நீர் வாரியம் திருச்சி பகுதியை ‘Semi-Critical’ (அபாயத்தை நோக்கி செல்லும் பகுதி) என வகைப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை திருச்சி மாவட்டத்தில் சீரான அளவில் பெய்யாததால் ஆறுகளுக்கு போதிய நீர்வரத்து கிடைக்கவில்லை. இடையிடையே மழை பெய்தாலும், குடிநீர் ஆதாரங்களை நிரப்பும் அளவுக்கு நீடித்த மழை இல்லாததால் நீர் நிலைகளும், ஆற்றுப்படுகைகளும் வறண்டு காணப்படுகின்றன.

மேட்டூரில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் 1,000 கனஅடி நீரின் அளவை உயர்த்தினால், திருச்சி மாநகரின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும். ஆற்றுப்படுகைகளில் கூடுதல் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகளும் பரிசீலனையில் உள்ளது என்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மேட்டூர் அணை திறக்கப்படாததால் கடந்த மாதம் வரை டெல்டா விவசாயிகள் மட்டுமே பாதிக்கப்பட்டனர். தற்போது நிலைமை மேலும் மோசமடைந்து, பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் வினியோகத்திற்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரியில் கூடுதல் நீரைப்பெற்று, குறைந்தபட்சம் குடிநீர் தேவைக்காகவாவது மேட்டூரில் இருந்து கூடுதல் அளவில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.