Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வாத்தலை அருகே பொதுமக்களை அச்சுறுத்திய 5 ரவுடிகள் கைது

சமயபுரம், ஜூன் 30: வாத்தலை அருகே சிறுகாம்பூர் கிராமத்தில், பள்ளி மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வந்த 5 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். வாத்தலை அருகே உள்ள சிறுகாம்பூர் கிராமத்தில் பெரிய மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஐந்து நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் 5 பேரும் எந்த வேலைக்கும் செல்லாமல், அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு, கோழிகளைத் திருடி விற்று, அந்தப் பணத்தில் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் மதுபோதையில் பொது இடங்களில் அசிங்கமாகப் பேசுவதுடன், அவ்வழியாகச் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளைத் தொடர்ந்து கிண்டல் செய்து, அவர்களுக்குப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தது.

இவர்களின் செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாத சிறுகாம்பூர் கிராம மக்கள் ஒன்று திரண்டு வாத்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பொதுமக்களின் புகாரின் பேரில் திருச்சி மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், வாத்தலை இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைத்து அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய 5 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான காக்கா பிரவீன், தக்காளி சதீஷ், சூர்யா, கிருஷ்ணகோபால், ரஞ்சித் ஆகியோரை வாத்தலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நீண்ட நாட்களாகத் தங்களுக்குப் பெரும் தொல்லையாகவும், தங்களின் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் இருந்த இந்தக் கும்பலை விரைந்து கைது செய்ததற்காக, சிறுகாம்பூர் பெரிய மாரியம்மன் கிராமப் பொதுமக்கள் வாத்தலை போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர். கைதான 5 பேர் மீது ஏற்கனவே கொலை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.