Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உற்சாக குளியல் திருச்சி அருகே ஆசிரியை கொலை வழக்கில் தம்பதி உள்பட 4 பேர் கைது

துறையூர், செப்.28: துறையூர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியை கொலை வழக்கில் தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மகள் சுகன்யா (35). இவர் காளிப்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி விவாகரத்து ஆன இவர், தனது குழந்தையுடன் தகப்பனாரின் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று சுகன்யா கண்ணனூர் அருகே சமத்துவபுரத்தில் உள்ள தனது தோழியிடம் கொடுத்த கடனை வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து கரட்டாம்பட்டியில் இருந்து வெளியனுர் செல்லும் சாலையில் உள்ள பாலத்திற்கு அடியில் சுகன்யா சடலமாக கிடந்தார். இது தொடர்பாக புலிவலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போது, கண்ணனூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் சத்யா (35) என்பவரிடம் கொடுத்த கடன் தொகையை வாங்க சென்ற பொழுது, அங்கு ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, சத்யா மற்றும் அவரது கணவன் துரைராஜ் (42) ஆகிய இருவரும் சேர்ந்து சுகன்யாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்து அவரது உடலை டூவீலரில் வைத்து கரட்டாம்பட்டி பகுதியில் உள்ள பாலத்தின் அடியில் வீசிவிட்டு, சுகன்யாவின் இருசக்கர வாகனத்தை காளிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சத்யாவின் கணவர் துரைராஜை புலிவலம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்தனர். இந்த நிலையில் சுகன்யா கொலை வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பதாக துரைராஜ் மனைவி சத்யா(39), துரைராஜ் மகன் விஜய்(20), இவர்களுடைய உறவினர்கள் சேலம் மாவட்டம் முட்டல் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சக்திவேல்(39), சக்திவேலின் மனைவி செல்வி (35) ஆகிய 4 பேரையும் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.