Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவெறும்பூர் அருகே பாசனகுளத்தை ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீரின்றி விவசாயம் பாதிப்பு

திருவெறும்பூர், ஜூன் 26: திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் ஏரி பாசன கமிட்டி சார்பில் சமுத்தி குளத்தில் உள்ள 60 ஏக்கர் ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும் என திருவெறும்பூர் தலைமையிடத்து துணை தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தைச் சேர்ந்த சமுத்திகுளம் கிருஷ்ண சமுத்திரத்தில் உள்ளது. இந்த குளம் 217 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த குளத்தின் மூலம் 478 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. குளத்தின் நடுவே திருச்சி -தஞ்சை ரயில்வே லைன் கிழக்கு மேற்காக குறுக்கே செல்கிறது. இந்நிலையில் ரயில்வே லைனுக்கு தெற்கே உள்ள பகுதியில் அங்கு எழில்நகர் மற்றும் கீழகுமரேசபுரம் பகுதியில் வசிப்பவர்கள் குளத்தின் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் விவசாயத்திற்கு போதுமான நீரை சேமித்து வைக்க முடியாமல் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கதிர் வரும் போது நெற்பயிரை காப்பாற்ற முடியாமல் உள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த குளம் மூலம் பல காலமாக விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழில் செய்து பிழைத்து வருகின்றனர். விவசாய தொழிலை காப்பாற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை தமிழக அரகே தூர் வாரியும் எல்லையை பாதுகாத்து கொடுத்தால் எதிர்கால தலைமுறைக்கு எவ்வித அச்சுறுத்தலும், பயமின்றியும் விவசாயம் செய்தும் எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று கூத்தைப்பார் மற்றும் கிருஷ்ணசமுத்திரம் ஏரி பாசன கமிட்டி சார்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு தாலுகா அலுவலகம் வந்து திருவெறும்பூர் தலைமை இடத்து துணை தாசில்தார் விமலாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது இந்த பகுதியில் வீடுகள் கட்டியும் ஆக்கிரமித்த இடம் தரிசாகவும் உள்ளது.

இந்த இடத்தை சிலர் சென்ட் இரண்டு லட்சம் என கூறி விற்பனை செய்து வருகின்றனர். சுமார் 60 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் குளத்தில் தண்ணீர் மட்டம் உயரும் போது ஆக்கிரமித்து உள்ள வீடுகளுக்கும் தண்ணீர் வருகிறது என்று கலிங்கியை உடைத்து விடுகின்றனர் எனக் கூறினர். மனுவை பெற்றுக்கொண்ட தலைமை இடத்து துணை தாசில்தார் விமலா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உங்களது கோரிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் சங்கப் பொருளாளர் ஆறுமுகசாமி என்பவர் கூறியதாவது: கிருஷ்ண சமுத்திரத்தில் உள்ள சமுத்திகுளம் 60 முதல் 65 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதில் 30 ஏக்கர் வீடு கட்டப்பட்டுள்ளதாகவும் மீதம் உள்ள 30 ஏக்கர் தரிசு நிலமாக உள்ளது.

இந்த குளத்தின் மூலமாகத்தான் 417 ஏக்கர் பாசன சக்தி பெறுகிறது. தற்பொழுது மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் சமுத்தி குளத்தில் வரும் தண்ணீரை வைத்து விவசாயம் செய்யலாம் என்று நினைத்தால் அந்த குளத்தை சென்ட் இரண்டு லட்சம் என எந்தவித ஆவணமும் இல்லாமல் விற்பனை செய்து வருவதாகவும், அதனை தமிழக அரசு மீட்க வேண்டும் என்று கூறினார். சங்கத் தலைவர் சங்கிலி முத்து கூறியதாவது: இந்த குளத்தில் இருக்கும் தண்ணீரை நம்பிதான் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். இது எங்களது வாழ்வாதாரப் பிரச்சினை. குளம் நடுவே ரயில்வே பாதை செல்கிறது. 150 ஏக்கர் தென்பகுதியில் உள்ளது. இந்த தென்பகுதியில் தண்ணீர் நிறைந்த பிறகு தான் வடபகுதிக்கு தண்ணீர் வரும். அந்த பகுதியில் உள்ளவர்கள் குளத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

எங்களுக்கு 300 நாட்கள் தண்ணீர்வேண்டும் இல்லை என்றால் பயிர்கள் கதிர் வரும் நேரத்தில் தண்ணீர் இல்லாமல் போகும் சூழ்நிலை ஏற்படும். எனவே குளத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கரையை நான்கு புறமும் கட்டி தர வேண்டும் என கூறினார்.