திருச்சி செப்.23: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து வரும் காவேரி ஆறு திருச்சி மாவட்டத்தில் அகண்ட காவிரியாக உருவெடுத்து செல்கிறது.இவ்வாறு திருச்சியில் பாயும் காவிரி ஆறு முக்கொம்பு மேல் அணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் உள்ளிட்ட இரண்டு ஆறுகளாக பிரிகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த முக்கொம்பு சிறந்த சுற்றுலா பகுதியாகவும் திகழ்கிறது.குறிப்பாக முக்கொம்பு மேலணை டெல்டா மாவட்ட விவசாயத்திற்கு தேவையான நீரை முறைப்படுத்தி வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் முக்கொம்பு மேலனை கொள்ளிடம் ஆற்றில் 7 மதகுகள் உடைந்தன,இதனையடுத்து அதை அதிகாரிகளும் சரி செய்தனர்.
இதே போல் முக்கொம்பு மேலனை காவேரி ஆறு பாலத்தில் 41 தூண்கள் உள்ளன, காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முக்கொம்பு காவேரி பாலத்தில் மண் அரிப்பால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 35வது தூண் பாலத்தில் இருந்து ஒரு அங்குலம் விலகி காணப்பட்டது. அது கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு 12 சென்டி மீட்டராக விலகி காணப்பட்டது, தற்போது ஒரு அடிக்கு மேல் தூண் விலகிக் காணப்படுகிறது, மற்ற 40 தூண்களும் ஒரே நேராக இருக்கும் நிலையில் 38 வது தூண் மேற்குப் பக்கமாக விலகி உள்ளது.


