Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தொட்டியம் அருகே மூதாட்டி வீட்டில் 23½ பவுன் திருட்டு

தொட்டியம், ஆக.21: தொட்டியம் அருகே மூதாட்டி வீட்டில் 23½ பவுன் தங்கநகை மற்றும் செல்போனை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சீலம்மாள் (70). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு சீலம்மாள் வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் வீட்டிற்குள் புகுந்து விட்டத்தில் கொக்கியில் மாட்டப்பட்டிருந்த மஞ்சள் பையைத் திருடிச் சென்றுள்ளார்.

அந்தப் பையில் இரட்டை வட தங்கச் சங்கிலி (6 பவுன்), செயின் பதக்கம் (4 பவுன்), 6 வளையல்கள் (9 பவுன்), இரண்டு மோதிரங்கள் (1 பவுன்), மைனர் சங்கிலி (2 பவுன்), தாலி மற்றும் தாலி குண்டு (½ பவுன்), தங்க நாணயம் (1 பவுன்) என மொத்தம் 23½ பவுன் தங்க நகைகள் இருந்துள்ளது. மேலும் செல்போனும் திருட்டுப்போனது. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3,50,000 எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சீலம்மாள் அளித்த புகாரின் பேரில், தொட்டியம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் மூதாட்டி வீட்டில் நகை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.