Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வரும் செப்.1ம் தேதி முதல் கோயில்களுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை

திருச்சி, ஆக.20: இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களுக்குள் செல்பான் எடுத்து செல்ல வரும் செப்.1ம் தேதி முதல் தடை விதித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதையடுத்து, திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கியமான கோயில் நுழைவாயில்களில், இதுகுறித்து அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. அதன்படி இந்த தடை வரும் செப்.1ம் தேதி முதல் அமலுக்கு வருவதால், திருச்சியிலுள்ள பல்வேறு கோயில்களிலும், இதுகுறித்த அறிவிப்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க சிறப்பு கவுண்டர்களும் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ரங்கம் கோயிலின் 3 கோபுர வாயில்களிலும் 15,000 செல்போன்கள் வைக்கும் வகையில் 3,000 பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன.

திருவாணகை்காவல் கோயிலில் 4 வாசல்களிலும் சேர்த்து மொத்தம் 500க்கும் மேற்பட்ட பெட்டிகளும், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலில் 200க்கும் மேற்பட்ட பெட்டிகளும், சமயபுரத்தில் 1000 பெட்டிகளுக்கும் மேல் வைக்கப்பட்டுள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோயில்களுக்கு வரும் பக்தர்களில் சிலர் கோயில்களின் பராம்பரியத்திற்கு எதிராக, கோயிலுக்குள் புகைப்படம் எடுப்பது, ரீல்ஸ் எடுப்பது, வீடியோ எடுப்பது என்ற செயல்களில் ஈடுபடுவதுடன், அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரவச்செய்கின்றனர். இது பக்தர்கள் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுபாடுடையவர்களுக்கு கடும் மன வருத்தத்தை ஏற்படுத்தி வந்ததை கருத்தில் கொண்டு, வரும் செப்.1ம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களுக்குள் செல்போன்களை கொண்டு செல்ல தடைவிதிக்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். இதையடுத்து, கோயில்களுக்கு வரும் பக்தர்களின் செல்போன்களை வாங்கி பாதுகாக்கும் வகையில், செல்போன் வைப்பகங்களை கோயில் இணை கமிஷனர்கள் தலைமையிலான கோயில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து கோயில் வட்டாரங்கள் தெரிவித்ததாவது, ‘வரும் செப்.1ம் தேதி முதல் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களுக்குள் செல்போன்கள் அனுமதிக்கப்படாது. இதற்காக, ரங்கம் தெற்கு கோபுர வாசலில் செருப்புகள் பாதுகாக்குமிடம் அருகில் ஒரு அமைக்கப்பட்டுள்ள செல்போன் வைப்பகத்தில், வங்கி லாக்கர் போன்று 2,000 தனித்தனி பெட்டிகள் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் எனில் ஒரு பெட்டியில் அதிகபட்சம் 5 செல்போன்கள் வரை வைத்து கொள்ளலாம். அதே போன்று, வடக்குவாசல் கோபுர வாசலில் 500 பெட்டிகள் கொண்ட செல்போன் வைப்பறையும், கிழக்குவாசலில் 500 பெட்டிகள் கொண்ட செல்போன் வைப்பறையும் தயார் நிலையில் உள்ளன. அவ்வகையில் மொத்தம் 3,000 பெட்டிகளில் குறைந்தபட்சம் 3,000 செல்போன்களும், அதிகபட்சம் 15,000 செல்போன்களும் வைக்க முடியும். இதே போன்று திருவாணைக்காவல், சமயபுரம் மாரியம்மன் மற்றும் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில்களிலும் ஒவ்வொரு வாயில்களிலும் செல்போன் வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் முடிந்தளவு தங்கள் செல்போன்களை கொண்டு வராமல் இருப்பது சிறந்தது. கோயிலுக்கு வரும் முன் வீட்டிலோ அல்லது அவர்கள் வரும் வாகனத்திலோ செல்போன்களை பத்திரமாக வைத்துவிட்டு வந்தால், கோயில் பணியாளர்களின் பணிச்சுமையையும், பக்தர்களுக்கு வரிசையில் காத்திருந்து செலவாகும் தேவையற்ற காலவிரயத்தையும் குறைக்கமுடியும்’ என்றனர்.