திருச்சி,ஆக.20: பஸ்சில் பல லட்சம் பணத்தை வைத்துவிட்டு, ேபருந்தையும் தவறவிட்டு நள்ளிரவில் நடுவழியில் தவித்த முதியவரை திருச்சி சுற்றுலா குழுவினர் மீட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (65). வியாபாரியான இவர் வியாபார விஷயமாக சென்னை சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ்சில் திருநெல்வேலி திரும்பிச் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 1:45 மணியளவில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை டோல்கேட் அருகே டீ குடிப்பதற்காக பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது, முதியவர் கழிப்பறைக்கு சென்று வருவதற்குள் பஸ் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
பஸ்சில் இருந்த தனது பையில் பல லட்சம் பணம் இருந்ததால், என்ன செய்வதென்று தெரியாமல் முதியவர் அதிர்ச்சியில் நடுவழியில் தவித்தார். அப்போது குடும்பத்துடன் குற்றாலம் நோக்கி சுற்றுலா சென்ற திருச்சியைச் சேர்ந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகி சையது முஸ்தபா, டீ குடிப்பதற்காக அங்கு வந்துள்ளார். பதற்றத்துடன் நின்றிருந்த செல்வகுமாரிடம் விசாரித்தபோது, அவர் நடந்ததைக் கூறி கண்ணீர் வடித்தார். உடனடியாக சையது முஸ்தபா காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (100) தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, முதியவரிடம் இருந்த பயணச் சீட்டை வைத்து ஆன்லைன் வழியாக பஸ் டிரைவரின் செல்போன் எண்ணைக் கண்டுபிடித்துத் தொடர்பு கொண்டார். அதற்குள் பஸ் சுமார் 25 கி.மீ தூரத்தைக் கடந்திருந்தது.
வழியிலேயே பஸ்சை நிறுத்துமாறு கூறிய சையது முஸ்தபா, முதியவரைத் தனது சுற்றுலா வேனில் ஏற்றிச் சென்று 25 கி.மீ தொலைவில் காத்திருந்த பஸ்சில் பத்திரமாக சேர்த்தார். பஸ்சில் இருந்த பல லட்சம் பணம் பத்திரமாக இருப்பதை உறுதி செய்த முதியவர் தனக்குக் உதவிய திருச்சி குடும்பத்தினருக்குக் நன்றி தெரிவித்தார். மேலும், இந்த செயலை கண்ட பேருந்தில் பயணித்த நபர்களும் திருச்சி சுற்றுலா குழுவினரை வெகுவாக பாராட்டினர்.



