Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

துறையூர் வெங்கடேசபுரம் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து: தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

துறையூர், ஆக.19: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வெங்கடேசபுரத்தில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் சூழ்ந்த அடர் புகையால் துறையூர் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வெங்கடேசபுரத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கில், நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. சூறாவளிக் காற்றின் வேகத்தினால் தீ கணநேரத்தில் குப்பைக் கிடங்கு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் வெளியான புகையானது வானளவு உயர்ந்து, சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதையும் ஆக்கிரமித்தது. இந்த அடர் புகையின் காரணமாக அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட கடுமையான சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டு பெரும் இன்னலுக்கு ஆளாயினர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் துறையூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் குப்பைகளைக் கிளறி தீயை அணைக்க முயன்றபோது, அடியில் இருந்த தீ மேலும் பரவி எரியத் தொடங்கியது. இதனால் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவருவதில் தீயணைப்பு வீரர்களுக்குப் பெரும் சவால் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்குத் துறையூர் நகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் நேரில் விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணிகளை முடுக்கிவிட்டுத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். விடிய விடியத் தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதி முழுவதும் இன்னமும் புகைமூட்டமாகக் காட்சி அளிக்கிறது.