முசிறி, ஆக.19: திருச்சி மாவட்டம் முசிறியையும், கரூர் மாவட்டம் குளித்தலையும் இணைக்கும் மிக முக்கியப் பாலமாக அகண்ட காவிரியின் குறுக்கே அமைந்துள்ள தந்தை பெரியார் பாலம் திகழ்கிறது. வட தமிழகத்தையும் தென் தமிழகத்தையும் இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தப் பாலத்தை உடனடியாகப் புதுப்பிக்கவும், அதன் உறுதித்தன்மையை ஆய்வு செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரலாற்றுப் பெருமைமிக்க இணைப்புப் பாலம் இந்தப் பாலம் அமைப்பதற்கு முன்பு, காவிரி ஆற்றைக் கடக்க பரிசல் பயன்பாடும், கோடைக் காலத்தில் ஆற்றின் குறுக்கே நடந்து செல்லும் சூழலுமே நிலவி வந்தது. பொதுமக்களின் இந்த நீண்டகாலப் போராட்டத்திற்குத் தீர்வாக அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் 1971ம் ஆண்டு பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்து, 1979ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் பாலம் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவின் போது, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் பாலத்தின் கட்டுமானப் பணியில் திறம்பட பணியாற்றிய முதன்மை கொத்தனாரை கொண்டே ரிப்பன் வெட்டி பாலத்தை திறக்கச் செய்து சிறப்பித்தார்.
இந்த வரலாற்று நிகழ்வை உணர்த்தும் அடிக்கல் மற்றும் திறப்பு விழா கல்வெட்டுகள் இன்றளவும் பாலத்தின் பெருமையைச் பறை சாற்றுகின்றன. சுமார் 36 கான்கிரீட் தூண்களைக் கொண்டு அகண்ட காவிரியின் குறுக்கே நீண்ட தூரத்தைக் கடக்கும் வகையில் மிக வலுவாகக் கட்டப்பட்ட இந்தப் பாலம், பல இயற்கைச் சீற்றங்களையும் வெள்ளப் பெருக்குகளையும் தாங்கி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றி வருகிறது.
தற்போது இதன் வழியாக இரு மாவட்டப் பேருந்துகள் மற்றும் தொலைதூரப் பேருந்துகள் மாநிலங்களுக்கு இடையேயான கனரக சரக்கு வாகனங்கள், கார், வேன் மற்றும் லோடு ஆட்டோக்கள் என நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் எவ்வித ஓய்வுமின்றி பயணித்து வருகின்றன. நாற்பது ஆண்டுகளைக் கடந்த பழமையான பாலம் என்பதால், பாலத்தின் தூண்கள் மற்றும் அடித்தளத்தின் பலத்தை அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்ய நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும். பாலத்தின் மேல் தளத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளைச் சரிசெய்து, சீரான தார்ச்சாலை மற்றும் நடைபாதைகளை அமைக்க வேண்டும்.
பாலத்தின் இருபுறமும் உள்ள கைப்பிடிகளைப் பலப்படுத்தி, இரவு நேரப் பயணங்களுக்காக கூடுதல் மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், மண் அரிப்பினால் பாலத்தின் தூண்கள் தனது உறுதி தன்மையை இழந்திருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அதனை உறுதிப்படுத்த வேண்டும், இது தவிர பாலத்தின் அருகே கூடுதலாக ஓர் பாலம் கட்டுவதற்கு தொலைநோக்கு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு தயாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



