முசிறி, ஆக.17: பெரம்பலூரில் இருந்து முசிறி வழியாகத் திருப்பூர் செல்ல நேரடி அரசுப் பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பெரம்பலூர் எம்பி கே.என். அருண் நேருவிடம் பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். துறையூர், தொட்டியம் மற்றும் முசிறி ஆகிய மூன்று தாலுகாக்களின் தலைமை இடமாக முசிறி கோட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் கீழ் 150-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. அதேபோல், வளர்ந்து வரும் மாவட்டத் தலைநகராக விளங்கும் பெரம்பலூரில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இரவு நேரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், முக்கியத் தொழில் நகரமான திருப்பூருக்குச் செல்லக் காலை, பகல் அல்லது இரவு நேரங்களில் நேரடி அரசுப் பேருந்து வசதி இல்லை.
+
Advertisement



