Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அரியமங்கலம் ஸ்டாலின் நகர் பகுதியில் 45 ஆண்டுகளாக இருளில் வாழும் மக்கள்

திருச்சி, ஜூன் 16: திருச்சி அரியமங்கலம் ஸ்டாலின் நகர் பகுதியில் 45 ஆண்டுகளாக, இருளில் குடியிருந்து வரும் 75க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், தங்கள் குடியிருப்புகளுக்கு, பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி, தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருடன் மனு அளிக்க நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி அரியமங்கலம் அமலாபுரம் குப்பைக்கிடங்கு பகுதிக்கு அருகிலுள்ளது ஸ்டாலின் நகர். இப்பகுதியில், கடந்த 1990ம் ஆண்டு முதல் 25க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இங்கு குடியேறுவதற்கு முன் இந்த மக்கள் அரியமங்கலம் குப்பைக்கிடங்கு பகுதியில் கட்டப்பட்டிருந்த நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கான அரசு குடியிருப்புகளில் குடியிருந்தனர்.

இந்நிலையில் அந்த அரசு குடியிருப்பு சிதிலமடைந்ததால் குடியிக்க தகுதியில்லாத நிலைக்கு மாறியது. பின்னர் அரசு அலுவலர்கள் அறிவுறுத்தலின் பேரில், துாய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் வெளியேறி, குப்பைக்கிடங்குக்கு வெளியே அமைந்துள்ள ஸ்டாலின் நகரில் குடியேறினர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் அவர்களுக்கு உதவி செய்துள்ளார். அப்போது இருந்த 25 குடும்பங்கள் தற்போது பல்கி பெருகி 75க்கும் மேற்பட்ட குடும்பங்களாகியுள்ளன. இருப்பினும் 75 குடும்பங்களும் 25 குடும்பங்களுக்கான குடியிருப்புகளில் ஒன்டிக்குடுத்தனம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அதே அதிமுக குடும்பத்தினர் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கிய போது, இப்பகுதி மக்களை சந்தித்து எங்களுக்கு ஓட்டளியுங்கள், உங்களுக்கு பட்டா மற்றும் மின் இணைப்பு பெற்றுத்தருகிறோம் என உறுதியளித்தனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஒருசில வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு பெற்றுத்தந்துள்ளனர். தொடர்ந்து இவர்கள் வசித்து வந்த பகுதிகளில் ஒரு பாதி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும், அவ்வாறு மாற்றியவுடன், துாய்மை பணியாளர்களின் கட்டியிறுந்த வீடுகள் பலவற்றை இடித்துவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த இந்த அராஜகத்தை எந்த அரசு அதிகாரிகளும் கண்டுக்கொள்ளவில்லை என்றும் கூறுகின்றனர். இந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்ததன் காரணமாக தங்கள் தேவை குறித்து விபரமாக தெரிவித்து கோரிக்கை விடுக்க முடியாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போதைய சற்று படித்த தலைமுறையினர். தங்கள் அடிப்படை உரிமைகளை எடுத்துக்கூறி, பல அரசு அலுவலகங்களுக்கும் தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், என் மாமனார், மாமியார் போன்றோருக்கு கல்வி அறிவு இல்லை. தற்போது நாங்கள் ஓரளவு படித்துள்ளோம். எங்கள் பிள்ளைகளும் நல்ல முறையில் படித்து வருகின்றனர். நாங்கள் 45 ஆண்டுகளாக இங்கு குடியிறுந்து வரும் அடிப்படை உரிமையின் பேரில், எங்களுக்கு பட்டா வழங்குங்கள், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குங்கள், எங்கள் பிள்ளைகளும் மற்றவர்கள் போன்று நன்றாக படித்து புதிய உயரத்தை எட்டுவதற்கு வழி விடுங்கள் எனக்கேட்கிறோம்.

தற்போது தற்காலிக துாய்மை பணியாளர்களாக இருந்து வரும் எங்கள் பணிகளை நிரந்தர படுத்திக்கொடுங்கள், கொரானோ காலத்தில் துாய்மை பணியாளர்களின் சமுதாய பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்பதை அரசு நினைத்து பார்க்க வேண்டும். வெறுமனே துாய்மை பணியாளர்கள் பேரிடர் காலத்தில் முன்கட்ட பணியாளர்களாக நின்று சிறந்த சேவை செய்தவர்கள், அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் எனக்கூறினால் மட்டும் போதுமா?. குறைந்தபட்ச வாழ்வாதாரம் கூட இன்றி நாங்கள் தவித்து வருகிறோம். எனவே ஒரு நகரப்பகுதியில் 45 ஆண்டுகளாக வெளிச்சம் இன்றி இருளில் தள்ளப்பட்டிருக்கும் எங்கள் கோரிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்து உரிய தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்றார்.

நாகரீகம் வளர்ந்துவிட்ட இன்றைய சூழலில் அரியமங்கலம் ஸ்டாலின் நகர் பகுதியில் 75க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 45 ஆண்டுகளாக இருளில் வாசம் செய்து வருவதற்கு விடிவு பிறக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் தெரிவிக்கின்றனர்.