கோாரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஆக.14: ஓய்வு பெற்ற அலுவலர்கள், அரசு மருத்துவமனை மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைபெற அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே, சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் வள்ளுவன், பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓய்வூதியர் விருப்பப்படி மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேரவோ, விலகவோ அனுமதிக்க வேண்டும். அரசு ஊழியர்களை போன்று ஓய்வூதியர்களுக்கும் சந்தா பிடித்தம் ரூ.390 என குறைக்க வேண்டும். அரசு மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைபெற அனுமதி வேண்டும். அறுவை சிகிச்சையுடன் அனைத்து நோய்களுக்கும் உரிய சிகிச்சையளிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா மருத்துவம் முறையாக, முழுமையாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டு தொகை முழுமையாக பயன்படுத்த வேண்டும் மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவ காப்பீடு சார்பான குறைகளை நீக்க வேண்டும் உள்பட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராசு மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் துரைசாமி கோரிக்கை விளக்கவுரையாற்றினர். மாவட்ட பொருளாளர் நாகராசன் நன்றி கூறினார்.