ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கேட்டு மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் தர்ணா போராட்டம்
திருச்சி, ஆக.14: மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் டபுள்யூ ஹெச்வி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தர்ணா குறித்து அவர் கூறிதாவது:
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுதுறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களிலுள்ள பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு ஸ்கிரீனிங், ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, வீடுகளுக்கு மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 8,713 பேரும், நகர்ப்புறங்களில் 2,256 பேரும் என பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டபுள்யூ ஹெச்வி ஊழியர்கள் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். திட்டப்பணிகளுக்கு அப்பாற்பட்டு HSC, UPHC உள்ளிட்ட சுகாதார நிலையங்களில் OP பணிகள், பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட பணிகளையும் தங்களிடம் கட்டாயப்படுத்தி வாங்குகின்றனர். இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளது. பணிக்காக பெட்ரோல், செல்போன் டேட்டா கட்டணம், பேப்பர், நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்டவற்றை சொந்த செலவில் வாங்க வேண்டிய நிலையுள்ளது. மாதம் ரூ.5,500 மட்டுமே ஊக்கத்தொகையாக வழங்கப்படும் நிலையில், அதில் இருந்தே பணிச்செலவுகளை மேற்கொள்வதால் குடும்பச்செலவுகளுக்கு பணம் போதவில்லை என்றார்.
தர்ணாவில், WHV ஊழியர்களின் ஊக்கத்தொகையை ரூ.5,500ல் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்த வேண்டும், திட்டப் பணிகளுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும், ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணிச்சுமையை வரன்முறைப்படுத்த வேண்டும், டபுள்யூ ஹெச்வி என்ற நிலையிலிருந்து மாற்றி ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும். கடந்த மார்ச் 16ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், என்எச்எம் மூலம் மே.1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியாகியும் இதுவரை ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த தர்ணா போராட்டத்தில் ஏராளமான டபுள்யூ ஹெச்விஊழியர்கள் கலந்து கொண்டனர்.