திருச்சி, ஆக.14: இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் அதற்கான தொழில்நுட்ப கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில், திருச்சி பெல் மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த ஹைட்ரஜன் துறையுடன் தொடர்புடைய நிறுவனத்துடன் உத்திசார் கூட்டாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு மூலம் இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களுக்கான மின்னாற்பகுப்பு (Electrolysis) மற்றும் எலக்ட்ரோலைசர் அமைப்புகளை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கும், அவற்றின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பசுமை ஹைட்ரஜன் என்பது சூரிய, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீரை மின்னாற்பகுப்பு செய்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் முறையாகும். இதில் கார்பன் உமிழ்வு குறைவாக இருப்பதால், எதிர்கால தூய்மையான எரிசக்தி தேவைக்கான முக்கிய தொழில்நுட்பமாக பசுமை ஹைட்ரஜன் கருதப்படுகிறது. இந்தியாவின் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ், நாட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து மற்றும் தொழில்துறை பயன்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பெல் மேற்கொள்ளும் ஒத்துழைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
குறிப்பாக, ஆல்கலைன் எலக்ட்ரோலைசர் அமைப்புகளுக்காக thyssenkrupp nucera India Private Limited நிறுவனத்துடனும் பெல் நிறுவனம் 2026 ஜூலையில் உத்திசார் ஒத்துழைப்பு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஆல்கலைன் எலக்ட்ரோலைசர் அமைப்புகளின் உள்நாட்டு உற்பத்தியை படிப்படியாக அதிகரிப்பதுடன், இந்திய பசுமை ஹைட்ரஜன் திட்டங்களில் இணைந்து பங்கேற்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. இதற்கு முன்னதாக, பெல் மற்றும் கிரீன்ஸ்டாட் ஹைட்ரஜன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Greenstat Hydrogen India Private Limited) இடையே பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் சார்பு தயாரிப்புகள் தொடர்பான ஹைட்ரஜன் மதிப்பு சங்கிலியில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒத்துழைப்பு தேசிய ஹைட்ரஜன் இயக்கத்தின் இலக்குகளுக்கு பங்களிப்பதுடன், ஹைட்ரஜன் துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச்செய்வதற்கான முயற்சிகளுக்கும் உதவும் என பெல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே உள்ளிட்ட வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடனான பெல் நிறுவன கூட்டாண்மைகள், இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் துறையை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதுடன், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டங்களின் இலக்குகளை முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.



