திருவெறும்பூர், ஆக.12: திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இப்பணியில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் கீரனூர் புது மேலபுதுவயலை சேர்ந்த கருப்பையா மகன் கலையரசன் (35). முருகன் மற்றும் மணி ஆகிய மூன்று பேரும் கடந்த 10 வருடங்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஜெய்நகரில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, சுமார் 50 அடி உயரத்தில் இருந்து நிலை தடுமாறி கலையரசன் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலையரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



