துறையூர், ஆக.12: துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரம் கனமழை வெழுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே எல்நினோ தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெப்பத்தினால் சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் துறையூர் பகுதியில் சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். துறையூர் நகரப் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான செங்காட்டுப்பட்டி, கீரம்பூர், சிக்கத்தம்பூர், பாளையம், ஒக்கரை, மாரடி, கோட்டப்பாளையம், உப்பிலியபுரம், கீரம்பூர், பெருமாள்மலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதைத் தொடர்ந்து பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.



