Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உதவித்தொகையை ரூ.6ஆயிரமாக உயர்த்தக்கோரி முற்றுகை போராட்டம் நடத்திய 250 பேர் கைது

திருச்சி, செப்.8: மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி, அரசு வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் மாநிலம் தழுவிய மாபெரும் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு புறநகர் மாவட்ட தலைவர் ராஜேஸ், மாநகர் மாவட்ட தலைவர் கணேசன் (பொ) ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சமுத்தரவள்ளி, முன்னிலை வகித்தார். பேராட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ஆந்திராவில் வழங்குவது போல் ஊனத்தின் தன்மைக்கேற்ப மாதம் ரூ.6000, கடும் ஊனமுற்றோருக்கு ரூ.10,000, படுத்த படுக்கையாய் உள்ளவர்களுக்கு ரூ.15,000 என வழங்க வேண்டும். மாத உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து ஓராண்டிற்கு மேல் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உடனே உதவித்தொகை வழங்க வேண்டும்.

வறுமையில் வாடும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடப்பு பட்ஜெட் கூட்டத்திலேயே உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், மாவட்ட துணை தலைவர்கள் குமார், ரவி, புறநகர் மாவட்ட பொருளாளர் சித்ரா, மாநகர் மாவட்ட துணை தலைவர் அந்தோணி சேகர், பொருளாளர் மாலதி, மாவட்ட துணை செயலாளர் ஜெயபால் உட்பட 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 250 பேரை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்து கருமண்டபம் பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து, பின்னர் விடுவித்தனர்.