Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

லால்குடி அருகே இளம்பெண் கொலை வழக்கில் தடயமின்றி காவல்துறை தவிப்பு

லால்குடி, செப்.8: லால்குடி அருகே இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையிலும், கொலையாளிகள் குறித்த எந்தவொரு சிறு தடயமும் கிடைக்காமல் காவல் துறையினர் தவித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்புதான் தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த வழக்கில் நிலவும் தொய்வு பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த சிறுகளப்பூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரின் மனைவி செந்தமிழ் செல்வி(32). கடந்தசில மாதங்களுக்கு முன்பு, தனது மாட்டுக்கொட்டகை பணிகளை முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு வீடு திரும்பியபோது, மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவரது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அருகில் உள்ள ஏரியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியையே உலுக்கியது.

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். ஆனால், நாட்கள் நகர்ந்து 3 மாதங்களை எட்டியும் கொலையாளிகள் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். லால்குடி போலீசாருக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல் உள்ளது. ஏனென்றால் இந்த வழக்கு தொடர்பான தடயங்கள் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். கணவர், உறவினர்கள், சுற்றியுள்ள கிராம மக்கள், ஆடு-மாடு மேய்ப்பவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் எனப் பலரிடம் விசாரணை நடத்தியும் காவல்துறையினருக்கு இதுவரை எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை. ஓரிரு நாட்களில் பிடித்து விடுவோம் என அதிகாரிகள் அளிக்கும் வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளாகவே காற்றில் பறக்கின்றன. இதனால் சிறுகளப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இரவு 7 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சி நடுங்குகின்றனர்.

பழைய தனிப்படைகளால் எந்த பயனும் இல்லாததால், தற்போது புதிய தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை முடிவடைந்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் காவல்துறை தனது முழு பலத்தையும் துரிதமாகக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இனியும் கால தாமதம் செய்யாமல், அதிநவீன தொழில் நுட்பங்களையும், திறமையான விசாரணை அதிகாரிகளையும் பயன்படுத்தி, இந்த வழக்கின் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.