திருவெறும்பூர், செப்.7: திருவெறும்பூர் அருகே உள்ள அரசன்குடி போஸ்ட் ஆபீஸ் கிளை தலைவர் 5 பேரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி செய்தது சம்பந்தமாக திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி கிழக்கு உட்கோட்ட அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் ஜெயபாலன் (53) என்பவர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், திருவெறும்பூர் அருகே உள்ள மேலகல்கண்டார் கோட்டை சேர்ந்த ராஜசேகர் மனைவி ஜெயஸ்ரீ (42) என்பவர் அரசன்குடி கிளை அஞ்சலக தலைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி முதல் 2023ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி வரை உள்ள காலகட்டத்தில் அரசங்குடியை சேர்ந்த திலீபன் என்பவரிடம் 5 ஆயிரம், இந்திராணியிடம் 16,500, பொருள் செல்வியிடம் ரூ.4,000, திலகேஸ்வரியிடம் ரூ.12,000, ரத்தினம் என்பவரிடம் ரூ.37,500 என ரூ.75 ஆயிரத்தை கையாடல் செய்து உள்ளார். தற்போது அவர் பணியில் இல்லை, எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


