திருச்சி, நவ.2: திருச்சி மாவட்டத்தில் நேற்று 66 மையங்களில் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வினை எழுதுவதற்கு 19,814 தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில்15,966 பேர்கள் தேர்வு எழுதினர். 3,848 பேர்கள் தேர்வு எழுதவில்லை. திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-II (தொகுதி-II (ம) தொகுதி IIA பணிகளின் பதவிகளுக்கான போட்டித்தேர்வு நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-II மற்றும் தொகுதி IIA முதனிலை போட்டித்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா அரசு கல்லூரியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டத்தில் 6 வட்டங்களில் 66 தேர்வு கூடங்களில் இத்தேர்வை OMR TYPE தேர்வாக எழுத 19,814 தேர்வர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இத்தேர்வுக்கென 66 தேர்வுக்கூட முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இத்தேர்வு தொடர்பாக ஒட்டுமொத்த பொறுப்பாளராக 6 துணை கலெக்டர்கள் நிலையில் ஆணையிடப்பட்டிருந்தது. திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), லால்குடி, மணப்பாறை, முசிறி மற்றும் துறையூர் ஆகிய வருவாய் வட்டாட்சியர்கள் ஆய்வு அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தனர். இப்போட்டி தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு கூடங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள 25 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்குழுவிற்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர், ஆயுதம் ஏந்திய ஒரு போலீஸ் ஆகியோர் இயங்கினர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வை கண்காணிக்கும் பொருட்டு 66 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
அனைத்து தேர்வு கூடங்களிலும் தேர்வு நடைபெறுவதை பதிவு செய்திட வீடியோகிராப்பர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். அனைத்து தேர்வு கூடங்களிலும் போலீசார் மூலம் பலத்த பாதுகாப்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வாளர்கள் தேர்வு கூடங்களுக்கு செல்ல சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. தேர்வு எழுதவரும் தேர்வாளர்கள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் அனுமதிக்கப்படவில்லை. திருச்சி மாவட்டத்தில் நேற்று 66 மையங்களில் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வினை எழுதுவதற்கு 19,814 தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில்15,966 பேர்கள் தேர்வு எழுதினர். 3,848 பேர்கள் தேர்வு எழுதவில்லை


