Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஊதிய நிலுவைத்தொகைக்கு உத்தரவிட ரூ.30,000: லஞ்சம் பெற்று சிக்கிய கல்வி அலுவலர் சஸ்பெண்ட்?

திருச்சி, ஜூலை 2:திருச்சியில் லஞ்சம் பெற்று கைதான இடை நிலை கல்வி அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய சிபாரிசு செய்துள்ளதாக மாவட்ட கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் புகழேந்தி (55). இவர் முசிறியை அடுத்த தண்டலைபுத்தூர் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருவதுடன், கூடுதல் பொறுப்பாக இடைநிலை கல்வி அலுவலராகவும் உள்ளார். இவர் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளில் திருவெறும்பூர் பாய்லர் பிளாண்ட் பள்ளியும் ஒன்று. இப்பள்ளி கணித வகுப்பு பட்டதாரி ஆசிரியர் தேவி. இவரது கணவர் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இளமுருகு.

இந்நிலையில் தேவிக்கு வழங்கப்பட வேண்டிய ஆண்டு ஊதிய உயர்வு நிலுவைத்தொகை மற்றும் ‘டெட்’ தேர்வில் பெற்ற தேர்ச்சியின் அடிப்படையில் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என புகழேந்தியிடம் தேவியின் கணவர் இளமுருகு வலியுறுத்தியுள்ளார். அதற்கு புகழேந்தி, உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத இளமுருகு, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்தார். போலீசார் பொறிவைத்து புகழேந்தியை கையும் களவுமாக பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது. இந்நிலையில் புகழேந்தியை பணியிடை நீக்கம் செய்ய சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.