Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தவெகவில் இன்று இணைகிறோம்

கரூர், ஜூலை 2: இன்று காலை தவெகவில் இணையவுள்ளதாக கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் கடந்த 29ம்தேதி அன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து தவெகவில் அவர் இணைவார் எனவும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 43 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் நான் ஆற்றி வருகின்ற மக்கள் பணிகளும், பொதுநலத் தொண்டுகளும் நீங்கள் அறிந்ததே. குறிப்பாக, தமிழ்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சராக நான் பொறுப்பு போது பல்வேறு சிரமங்களில் இருந்த போக்குவரத்து துறையை இரவு பகல் பாராமல் உழைத்து நான் இருந்த ஐந்து ஆண்டு காலம் போக்குவரத்து துறையை பொற்க்காலமாக மாற்ற நான் ஆற்றிய பணிகளை நீங்கள் நன்கறிவீர்கள்.

அதுமட்டும் அல்ல கரூர் மாவட்டத்திலும் கொரோனா பெரும் தொற்றின் போதும், கரூர் மக்களின் இன்ப, துன்பங்களிலும் நான் உடன் இருந்தவன் என்பது நீங்கள் அறிவீர்கள் நம் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்லாட்சி புரிந்து வரும் விஜய், தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்து கொண்டு, என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கான மாபெரும் இணைப்பு விழா, வியாழக்கிழமை (2.7.2026), காலை 9 மணி முதல், மகாபலிபுரம் ஹோட்டல் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதேபோல முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது விராலிலை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து இன்று தவெகவில் இணையும் நிலையில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 35 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் நான் ஆற்றி வருகின்ற மக்கள் பணிகளும், பொதுநலத் தொண்டுகளும் நீங்கள் அறிந்ததே. குறிப்பாக, தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது, உலகையே உலுக்கிய ‘கோவிட்’ பெருந்தொற்று காலகட்டத்தில் முழு அர்ப்பணிப்போடு மக்களுக்காக நான் ஆற்றிய பணிகளை நீங்கள் நன்கறிவீர்கள். நம் மண்ணுக்கும், மக்களின் நல்வாழ்வுக்குமானஎன் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு, என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதற்கான மாபெரும் இணைப்பு விழா, இன்று காலை 9 மணி முதல், மகாபலிபுரம் ஹோட்டல் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.இந்நிகழ்வில் ஊடக நண்பர்களாகிய தாங்கள் நேரில் கலந்து கொண்டு, நிகழ்வை பதிவு செய்து, தங்களது வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்கிட அன்புடன் அழைக்கின்றேன் என்று கூறப்பட்டுள்ளது.

கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சென்னை புறப்பட்ட ஆதரவாளர்கள்

முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று காலை இணைவதையொட்டி அந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் சென்னையை நோக்கி படையெடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, விராலிமலை தொகுதியைச் சேர்ந்த 50 மேற்பட்ட வாகனங்களில் முதல் நாளான நேற்றே தனித்தனியே மிகுந்த உற்சாகத்தோடு சென்னை புறப்பட்டனர்