Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேகதாதில் அணை கட்ட எதிர்ப்பு: கையில் மண்டை ஓடு ஏந்தி போராட்டம்

திருச்சி, ஜூன் 2:தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கம் சார்பில், மேகதாதில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதியளிக்கக்கூடாது என வலியுறுத்தி, கைகளில் மண்டை ஓடு ஏந்தி, காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தப்பட்டது. கர்நாடக மாநில அரசு மேகதாதில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுத்தால் தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், கையில் மண்டை ஓடு ஏந்தி காவிரி ஆற்றில் இறங்கி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார், விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யவோம் என்றுக்கூறி, அவர்களை கைது செய்து திருச்சி உறையூர் பகுதியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

பின்னர் வழக்கு எதுவும் பதியாமல் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாகண்ணு கூறுகையில், 1980ம் ஆண்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் 35 லட்சம் ஏக்கரில், குறுவை, சம்பா மற்றும் கோடை என முப்போகம் சாகுபடி செய்த தமிழக விவசாயிகள், தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் 2009ம் ஆண்டு அளித்த உத்தரவுபடியும், 2018ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின்படியும் 10 லட்சம் ஏக்கரில் ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. காவிரியில் இருந்து 350 டிஎம்சி-க்கு மேல் தண்ணீர் பெற்றுவந்த தமிழ்நாடு இறுதியாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி 177.25 டிஎம்சி நீர் மட்டுமே கிடைக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் மேகதாதில் புதிய அணைகட்ட முயற்சித்து வருகின்றன. இந்த அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் பாலைவனமாகும். 20 மாவட்ட மக்கள் குடிநீர் கூட கிடைக்காமல் செத்து மடிவார்கள். விவசாயிகளும், மக்களும் எவ்வாறு செத்து மடிந்து மண்டை ஓடு மட்டுமே மிஞ்சும் என்பதை அனைவருக்கும் அறிவுறுத்தும் விதமாக, மண்டை ஓட்டினை கையில் ஏந்தி, நாங்கள் விழிப்புணர்வு போராட்டம் நடத்தினோம். எங்கள் மீது வழக்கு பதிவு செய்வதாக கூறி போலீசார் எங்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்துவிட்டு, தற்போது வழக்கு ஏதும் பதியாமல் எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகின்றனர் என்றார்.