பாவூர்சத்திரம்,அக்.28: பாவூர்சத்திரம்- செட்டியூர் சாலையில் நிறுத்தப்பட்ட சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தொடங்கிடவும், அப்பகுதியில் பூங்கா அமைத்திடவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாவூர்சத்திரத்தில் இருந்து செட்டியூர் செல்லும் சாலையில் த.பி சொக்கலால் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு கடந்த சில மாதங்களுக்கு அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்றது, வாறுகால் அமைக்கும் பணி, மின் கம்பம் மாற்றி அமைக்கும் பணிகள் உள்ளிட்ட 90 சதவீத பணி நிறைவுபெற்றது. ஆனால் அப்பகுதியை சேர்ந்த சிலர் சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே அந்த இடத்தில் தற்போது சமூக விரோத செயல்களில சிலர் ஈடுபட்டு வருவதோடு குப்பைகளும் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்கள் கூறுகையில் ‘‘அந்த இடத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி சுற்றுச்சுவர் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பயன்பெறும் வகையில் பூங்கா அமைத்து தர வேண்டும். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்’’ என்றனர்.


