களக்காடு,நவ.3: களக்காடு அருகேயுள்ள கல்லடி சிதம்பராபுரத்தை அடுத்த பெருமாள்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் தேவ ஆசீர்வாதம் (65). இவர் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் குஜராத் மாநிலத்தில் வசித்து வருகிறார். இவர் வேலை நிமித்தம் அங்கு வசித்து வருவதோடு, அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இவருடைய வீட்டை பராமரிக்கும் பொறுப்பை இவரது உறவினரான யாக்கோபு மாணிக்கவாசகம் கவனித்து வந்தார். அவர் தினமும் மாலையில் மின்விளக்கு போடுவதும், காலையில் அணைப்பதுமாக இருந்து வந்துள்ளார்.
கடந்த 22ம்தேதி மாலை யாக்கோபு மாணிக்கவாசகம் வீட்டின் மின்விளக்கினை போட்டுவிட்டுச் சென்றுள்ளார். அதன்பிறகு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் கடந்த 5 நாட்களாக அந்த வீட்டிற்கு செல்லவில்லை. கடந்த 28ம்தேதி இரவு அவர் தேவ ஆசீவாதத்தின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 2 பைக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமிராவின் டிஸ்க் உள்ளிட்டவை மர்ம நபர்களால் திரு டிச் செல்லப்பட்டிருந்தது.
இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டதால் போலீசார் ஊருக்குள் புதிதாக நடமாடியவர்கள் குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் விசாரித்தனர். அப்போது 2 வாலிபர்கள் குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது குமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்த சத்யமூர்த்தி (35), சிதம்பராபுரம் முத்துநகரை சேர்ந்த சதீஷ் (29) என்பது தெரியவந்தது.


