நெல்லை, நவ.3: நெல்லை அருகே தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் உதிரிபாகங்களை திருடிய ஒப்பந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பிரபல தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தில் பயன்படுத்தப்படுத்தப்பட்ட 6க்கும் மேற்பட்ட கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகள் திருடு போனது. அவற்றின் மதிப்பு ரூ.70 ஆயிரம் ஆகும். இது குறித்து அந்நிறுவனத்தின் உதவி மேலாளர் ஜெயகாந்த் (39) கங்கைகொண்டான் போலீசில் புகார் செய்தார்.
இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அந் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளியான தச்சநல்லூரைச் சேர்ந்த வெங்கடேஷ்வரனை (26) நேற்று கைது செய்தனர்.
லோடுவேன் மோதி காயமடைந்தவர் சாவு கேடிசி நகர், நவ. 3: நெல்லை அருகே முன்னீர்பள்ளம் அடுத்த மேல முன்னீபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (47). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அந்த வழியாக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த லோடுவேன் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகேசனை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


