வந்தவாசி, செப்.30: வந்தவாசி அடுத்த தெள்ளார் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளை தாசில்தார் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தீயணைப்பு கருவிகள் செயல்படுகிறதா எனவும் சோதனை செய்தார். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு கடைகளுக்கு உரிமம் புதுப்பிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
பட்டாசு கடைகளை செய்யாறு சப்-கலெக்டர் அம்பிகா ஜெயின் விரைவில் கடைகளில் உரிமம் முறையாக பெறப்பட்டுள்ளதா? தீயணைப்பு கருவிகள் செயல்படுகிறதா? மணல் தொட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார். இதற்காக வந்தவாசி தாசில்தார் சரவணன் முன்னேற்பாடாக தெள்ளார் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பட்டாசு கடை உரிமம் பெற்றதற்கான சான்றிதழ் உண்மை தன்மை உள்ளதா? எனவும் பட்டாசு விபத்து ஏற்படாமல் தடுக்க தீ அணைப்பு கருவி செயல்படுகிறதா? எனவும் அப்போது கட்டிடத்தில் பின்பகுதியில் வழி உள்ளதா? எனவும் கட்டிடத்தினை சுற்றிப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் பரந்தாமன் கிராம நிர்வாக அலுவலர் சந்திரா உடன் இருந்தனர்.


