திருவண்ணாமலையில் கலெக்டர் அலுவலகம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்த்து பூட்டுபோட்டு பொதுமக்கள் போராட்டம்: கிரிவல பக்தர்களுக்கு இடையூறான கடையையும் அகற்ற கோரிக்கை
திருவண்ணாமலை, ஆக. 21: திருவண்ணாமலையில் கலெக்டர் அலுவலகம் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 203 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. குடியிருப்பு பகுதிகள், பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்களுக்கு அருகே செயல்படும் மதுக்கடைகளால் தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரச்னை ஏற்படுகின்றன. சமீபத்தில் 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 மதுக்கடைகள் மூடப்பட்டதாக தெரிவித்தனர். ஆனாலும், திருவண்ணாமலை காமராஜர் சிலை சந்திப்பு அருகே கிரிவல பக்தர்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையும், கலெக்டர் அலுவலகம் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையும் அகற்றப்படவில்லை. இந்நிலையில், திருவண்ணாமலை வேங்கிக்கால் கலெக்டர் அலுவலகம் அருகே கோட்டாங்கல் சாலையில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை, அங்கிருந்து அகற்றி அதே சாலையில் குடியிருப்பு பகுதியில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், டாஸ்மாக் மதுக்கடையை புதிய இடத்தில் திறப்பதற்கான முன்னேற்பாடுகளும் வேகமாக நடந்தன. மது பாட்டில்களை இரவோடு இரவாக கொண்டுவந்து புதிய இடத்தில் வைக்க முயற்சிகள் நடந்தன. அதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் புதிய இடத்தில் மதுக்கடையை திறக்காதபடி கடையின் கதவு முன்பு பெண்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து, அங்கு போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து கடை திறக்கும் முயற்சி கைவிடப்படுவதாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் அலுவலகம் அருகே ஏற்கனவே உயர்ரக மதுபான விற்பனை செய்யப்படும் எலைட் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. எனவே, தற்போது திறக்க திட்டமிட்டுள்ள மதுக்கடையை திறக்க கூடாது எனவும், எலைட் மதுக்கடையையும் அங்கிருந்து அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர்.



