Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை அருகே வீட்டின் பூட்டு உடைத்து 14 சவரன் நகை திருட்டு: போலீஸ் விசாரணை

திருவண்ணாமலை, ஆக. 21: திருவண்ணாமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் தங்க நகைளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி அமுதா(63). இவரது கணவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்தார். இவர்களுடைய இரண்டு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. எனவே, சோ.கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் உள்ள வீட்டில் அமுதா மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், இவரது கணவர் சுப்ரமணி சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.  எனவே, அவரது வங்கிக்கணக்கு உள்ளிட்ட ஆவணங்களை இவரது பெயருக்கு மாற்றுவதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமுதா சென்னை சென்றிருந்தார். அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் தனது பேரனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுது கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த்போது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 14 சவரன் தங்க நகைகள், ஒரு வெள்ளி விளக்கு, ரூ.10 ஆயிரம் மற்றும் வீட்டு பத்திரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக, கீழ்பென்னாத்தூர் போலீசில் அமுதா அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

கைரேகை மற்றும் தடயவியல் பிரிவினர் சோதனை நடத்தினர். ஆனாலும், எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்களாக வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், திட்டமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், விரிவாக்க பகுதிகளில் அடுத்தடுத்து வீடுகள் இல்லாத இடங்களை குறிவைத்து, அடிக்கடி இதுபோல நடைபெறும் திருட்டுச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.