சேத்துப்பட்டில் கான்ஸ்டபிளை தாக்கி கீழே தள்ளிவிட்டு பெண் எஸ்ஐ மீது போதைப்பொருள் கடத்தி வந்த காரை ஏற்றிக்கொல்ல முயற்சி: பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்
சேத்துப்பட்டு, ஆக. 21: சேத்துப்பட்டில் கான்ஸ்டபிளை தாக்கி கீழே தள்ளிவிட்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது, போதைப்பொருட்கள் கடத்தி வந்த காரை ஏற்றிக்கொல்ல முயன்ற 2 பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் குணபாலன், சப்-இன்ஸ்பெக்டர் லதா, கான்ஸ்டபிள் விக்னேஷ் உள்ளிட்ட போலீசார் நேற்று அதிகாலை வந்தவாசி சாலை, ஆரணி சாலை, 4 முனை சந்திப்பு ஆகிய இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆரணி சாலை வழியாக வந்த காரை, கான்ஸ்டபிள் விக்னேஷ் தடுத்து நிறுத்தினார். இதனால் திடீரென காரை நிறுத்திவிட்டு இறங்கிய டிரைவர், விக்னேஷை தாக்கி கீழே தள்ளினார். பின்னர் வேகமாக காரை ஓட்டிச் சென்றார். வழியில் நின்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் லதா காரை தடுக்க முயன்றார். உடனே டிரைவர், சப்-இன்ஸ்பெக்டர் லதா மீது கார் ஏற்றி கொல்வதுபோல் வேகமாக வந்தார். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் லதா, திடீரென விலகியதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தொடர்ந்து கார் மின்னல் வேகத்தில் பறந்தது.
இதனை கண்ட பொதுமக்கள் பைக்குகளில் காரை விரட்டி பழம்பேட்டை அரசுப்பள்ளி அருகே மடக்கிபிடித்தனர். பின்னர் காரில் இருந்த டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து தர்ம அடி கொடுத்து, இன்ஸ்பெக்டர் குணபாலனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார், கார் மற்றும் அதில் இருந்த 2 பேரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அதில் கார் டிரைவர் ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா ஜிடி நல்லூர் கிராமம் பட்டாபி பகுதியை சேர்ந்த கணேச பெருமாள்(46) என்பதும், மற்றொருவர் ஜி.டி.நல்லூர் முக்களத்தூர் பகுதியை சேர்ந்த சிவபிரசாத்(30) என தெரியவந்தது.
காரை சோதனையிட்டபோது, 25 மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது. அதனை சித்தூரில் இருந்து விழுப்புரத்திற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதேபோல் இவர்கள் வாரத்திற்கு 2 முறை குட்காபொருட்களை விழுப்புரத்திற்கு கடத்திச்சென்று கடைகளுக்கு சப்ளை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து கார் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் போளூர் டிஎஸ்பி மனோகரன் சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு வந்து கைது செய்யப்பட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தினார். சேத்துப்பட்டில் குட்கா கடத்தி வந்த காரை தடுக்க முயன்ற கான்ஸ்டபிளை தாக்கிவிட்டு, பெண் சப்-இன்ஸ்பெக்டரை கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



