Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருவண்ணாமலையில் கடந்த 12ம் தேதி தீபமலை மீது தடையை மீறி ஏறிய மும்பை வாலிபர் மாயம்: நவீன டிரோன் கேமிரா மூலம் தேடும் பணி தீவிரம்

திருவண்ணாமலை, ஆக.20: திருவண்ணாமலை தீபமலை மீது கடந்த 12ம் தேதி தடையை மீறி ஏறிய மும்பை வாலிபர் மாயமானதை தொடர்ந்து, அவரை நவீன டிரோன் கேமிரா மூலம் தேடும் பணியில் வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள தீபமலை இறைவனின் திருவடிவமாக வணங்கப்படுகிறது. எனவே, மலைமீது பக்தர்கள் செல்ல நிரந்தரமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தீபத்திருவிழா நடைபெறும்போது மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மலையடிவார காப்புக்காடு பகுதிகளுக்கும் பக்தர்கள் செல்ல வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான எச்சரிக்கை பலகைகளும் மலையின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், தடையை மீறி மலைமீது பக்தர்கள் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த தர்ஷன்ராவல்(28) என்பவர், திருவண்ணாமலையின் சிறப்புகள் குறித்து இணையளத்தின் மூலம் அறிந்து, நேரில் தரிசனம் செய்ய கடந்த 5ம் தேதி வந்திருக்கிறார். இவர், ஆன்மிக ஈடுபாடு கொண்டவர் என கூறப்படுகிறது. எனவே, இதுபோல நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆன்மிக பயணம் அடிக்கடி மேற்கொள்வது வழக்கமாம்.

அதன்படி, கடந்த 12ம் தேதி மாலை செல்போன் வீடியோ கால் மூலம் தனது தாயை ெதாடர்புகொண்டு பேசிய தர்ஷன்ராவல், திருவண்ணாமலை மலைமீது சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கான காட்சிகளையும் வீடியோ கால் மூலம் காண்பித்துள்ளார். ஆனால், அதன்பிறகு அவரது குடும்பத்தினரால் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் சுவிட்ச்ஆப் ஆகிவிட்டிருந்தது. சில நாட்களில் ஊருக்கு வந்துவிடுவார் என எதிர்ப்பார்த்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது.

எனவே, அவரது அண்ணன் திணேஷ்ராவல், திருவண்ணாமலைக்கு நேரில் வந்து போலீசில் புகார் அளித்தார். காணாமல் போன தன்னுடைய தம்பியை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில, தர்ஷன்ராவல் இறுதியாக திருவண்ணாமலை மலைப்பகுதியில் உள்ள செல்போன் டவர் சிக்னலை பயன்படுத்தி பேசியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

எனவே, மலையில் அவர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, 25க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர் நேற்று மலையின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அதோடு, ஆட்கள் நடமாட்டத்தை மிகத்துள்ளியமாக கண்டறியும் அதிநவீன தெர்மல் டிரோன் கேமிராவை மலைப்பகுதியில் பறக்கவிட்டு, தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகிறது.

மலைமீது ஏறிய மும்பை வாலிபர் என்ன ஆனார், மலையில் சிக்கியிருக்கிறாரா, அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா அல்லது கீழே இறங்கி சென்றுவிட்டரா என்ற விபரங்கள் தெரியவில்லை. ஆனாலும், போலீசார் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.