Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வந்தவாசி அருகே போதிய பஸ்கள் இல்லாததால் அரசு பஸ்சின் ஜன்னல் கம்பிகள், படிகளில் தொங்கியபடி மாணவர்கள் 3 கி.மீ. பயணம் வீடியோ வைரல்; பெற்றோர் அதிர்ச்சி

வந்தவாசி, ஆக. 20: வந்தவாசி அருகே போதிய பஸ்கள் இல்லாததால் அரசு பஸ்சின் ஜன்னல் கம்பிகள், படிகளில் தொங்கியபடி மாணவர்கள் 3 கி.மீ. தூரம் ஆபத்தான பயணம் செய்த வீடியோ வைரலான நிலையில் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 2 அரசு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. செய்யாறு நெடுஞ்சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து டபுள்யூ 8 தடம் எண் கொண்ட நகரப் பேருந்து அதிகாலை 5.30 மணிக்கு வந்தவாசியில் இருந்து புறப்பட்டு சேதாரக் குப்பம், புன்னை, கூட்டுச்சாலை, அதியனூர், அதியங்குப்பம், அம்மணம்பாக்கம், வெளியம்பாக்கம் வழியாக குறிப்பேடு சென்று இதே மார்க்கமாக புன்னை கூட்டுச்சாலை வரை வந்து பின்னர் மருதாடு கடைசி குளம் பிருதுர் வந்தவாசி நகரை 7.30 மணி அளவில் வந்தடையும்.

இதில் குறிப்பேடு, வெளியம்பாக்கம், அதியனூர், அதியங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவிகள் முதலாவதாக வந்துவிடுவார்கள். பின்னர் வந்தவாசியில் இருந்து மருதாடு, புன்னை, கூட்டுச்சாலை, ஓசூர் எட்டிகுட்டை வெண்மந்தை கீழ்ச்செம்பேடு, அமுடூர், வேப்பங்கரணை வழியாக செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தி வரை சென்று பின்னர் இதே வழியாக காலை 10.10 மணியளவில் வந்தவாசி நகரை வந்தடையும்.

புன்னை கூட்டு சாலையில் சுமார் 9.40 மணியளவில் இப்பேருந்து வருவதால் மருதாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் ஓசூர், புன்னை, போஸ்கோபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த பேருந்தை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் நேற்று டபுள்யூ 8, 10 பேருந்துகள் புன்னையில் இருந்து மருதாடுக்கு நேற்று காலை வந்தது. அப்போது பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் முண்டியடித்துக்கொண்டு ஏறினர்.

பஸ்கள் முழுவதும் நிரம்பிய நிலையில் தடம் எண் டபுள்யூ 8 பஸ்சில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கட்டுகளிலும், பஸ்சின் ஜன்னல் கம்பிகளை பிடித்தபடியும், ஓடும் பேருந்தின் மீது ஏறியபடியும் சாகசம் காட்டியபடி சுமார் 3 கி.மீ வரை சென்றனர். அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதைப்பார்த்து செல்போனில் வீடியோ எடுத்து வைரலாக்கினர். இதைப்பார்த்து மாணவர்களின் பெற்றோர் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பேருந்தில் செய்யும் அட்ராசிட்டியை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், பிள்ளைகளுக்கு பெற்றோர்களும் அறிவுரைகள் வழங்க வேண்டும். பஸ்சில் சாகச பயணம் செய்த மாணவர்களை கண்டுகொள்ளாமல் இருந்த கண்டக்டர், ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.