வருகிற 1ம் தேதி முதல் அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்போன்கள் எடுத்து செல்ல தடை: ரூ.5 கட்டணம் செலுத்தி பாதுகாப்பு மையத்தில் வைக்க ஏற்பாடு
திருவண்ணாமலை, ஆக. 19: அண்ணாமலையார் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல வரும் 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பரணிதரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக அமைந்துள்ள உலகபிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்குள் வரும் 1ம் தேதி முதல் செல்போன்கள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட உள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கை உத்தரவின்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வரும் 1ம் தேதி முதல் திருக்கோயிலுக்கு உள்ளே செல்போன்கள் (அலைபேசி) எடுத்து செல்வது தடைவிதிக்கப்பட உள்ளதால், செல்போன் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும்.
பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துச்செல்ல வசதியாக, திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் அருகில் இரண்டு இடங்களிலும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் இரண்டு இடங்களிலும், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகில் ஒரு இடத்திலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்காணும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை (அலைபேசிகளை) ரூ.5 கட்டணமாக செலுத்தி ஒப்படைத்துவிட்டு, டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்.
சுவாமி மற்றும் அம்மன் தரிசனம் முடித்து திரும்பியவுடன் டோக்கன் காண்பித்து செல்போன்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த உத்தரவினை மீறி திருக்கோயிலுக்குள் மறைமுகமாக எடுத்துச்செல்லும் செல்போன்களை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருக்கோயில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



