சேத்துப்பட்டு, ஆக.14: சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் மதுரா வில்வராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (25). இவர் மாங்கல் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வெங்கடேசன் வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைத்துவிட்டு, குடும்பத்துடன் வந்தவாசியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். இந்நிலையில் அவரது வீட்டில் யாரும் இல்லாதபோது வெங்கடேசனின் நண்பர் ஒருவர் வந்து சென்றது தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த வெங்கடேசன், வீட்டில் உள்ள பீரோவை பார்த்தபோது, அதில் வைத்திருந்த கால் சவரன் மோதிரம், 250 கிராம் வெள்ளி கொலுசு மற்றும் ரூ.5 ஆயிரத்து 500 ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர. அதில் இந்திரவனம் கிராமத்தை சேர்ந்த அஜித் (25) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அஜித்தும் வெங்கடேசனும் பள்ளி பருவத்தில் ஒன்றாக படித்த நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அஜித்தை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



