வந்தவாசி அருகே ஏரிக்கரையில் சந்தனமரங்கள் வெட்டி கடத்திய நபர்கள் யார்? தடயம் கிடைக்காமல் போலீசார் திணறல்
வந்தவாசி, ஆக.14: வந்தவாசி அருகே சந்தன மரங்கள் வெட்டி கடத்திய நபர்கள் யார்? என தெரியாததால் போலீசார் திணறி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிக்கரையில் சந்தனமரங்கள் உள்ளன. இவற்றில் 2 மரங்களை கடந்த 10ம் தேதி இரவு மர்மநபர்கள் வெட்டி திருடிச்சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் எனக்கூறப்படுகிறது.
செம்பூர் எஸ்.காட்டேரி நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஏரிக்கரையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும். இதுபோன்ற பகுதியில் சந்தன மரங்கள் வெட்டிக்கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் வனத்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தினேஷ்குமார் அளித்த புகாரின்பேரில் தெள்ளார் போலீஸ் எஸ்ஐ மாதவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் தற்போது வரை எவ்வித தடயமும் கிடைக்கவில்லை எனக்கூறப்படுகிறது. குறிப்பாக மரங்களை வெட்டி வேறு பகுதிக்கு கொண்டு சென்றதற்கான பதிவுகள் இல்லாததால் அதனை உள்ளூர் அல்லது பக்கத்து கிராமங்களை சேர்ந்த யாராவது வெட்டி நூதனமுறையில் எங்காவது பதுக்கி வைத்துள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



