32 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது கன்டெய்னர் லாரி பறிமுதல்
வந்தவாசி, நவ.13: வந்தவாசி அருகே 32 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வடவணக்கம்பாடி போலீசார் கடந்த 7ம் தேதி அதிகாலை காவல் நிலையம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை ரெட்ஹில்ஸில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற லோடு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில், 32 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா கடத்தல் தொடர்பாக திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செஞ்சி, தண்டராம்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள லாரி டிரைவரிடம் கஞ்சாவை வாங்கி வந்ததாக கூறியதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தாலுகா, மதூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பொட்டலம், கன்டெய்னர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், சென்னையை சேர்ந்த பிரபல லாரி அதிபரிடம் வேலை செய்து வந்ததாகவும், அவருக்கு சொந்தமாக 50க்கும் அதிகமாக லாரிகள் உள்ளதால், வழக்கமாக ஒடிசா மாநிலம் செல்வதாகவும், அவ்வாறு செல்லும்போது அங்கிருந்து கஞ்சா பொட்டலங்களை உரிமையாளருக்கு தெரியாமல் வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட மணிகண்டனை நேற்று வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.