அண்ணாமலையார் கோயிலில் உழவார பணி கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு
திருவண்ணாமலை, நவ.13: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உழவாரப் பணி நேற்று நடந்தது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் தீபத்திருவிழா உற்சவம் நடைபெறும். நிறைவாக டிசம்பர் 3ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீப பெருவிழாவும் நடைபெற உளளது. தீபத்திருவிழாவில் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பஙகேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் முன்னேற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. திருக்கோயில் பராமரிப்பு, பஞ்ச ரதங்கள் சீரமைப்பு பணி செய்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. மேலும், அம்மன் தேர் முற்றிலுமாக சீரமைக்கப்பட்டு, நாளை (14ம் தேதி) வெள்ளோட்டம் நடைபெற உள்ளது.
அதேபோல், தீபத்திருவிழா உற்வசம் நடைபெறும் 10 நாட்களும், சுவாமி புறப்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தையும் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட சிவபக்தர்கள் நேற்று அண்ணாமலையார் கோயில் வளாகம் முழுவதும் உழவாரப் பணி மேற்கொண்டனர். அப்போது, கொடியேற்று விழா நடைபெறும் தங்கக்கொடி மரம், அதன் அருகே உள்ள பலி பீடம், அகண்ட தீபம் ஏற்றப்படும் இடத்தினை முழுமையாக சுத்தம் செய்தனர். மேலும், கார்த்திகை தீபத்திருவிழாவின் 6ம் நாள் காலை உற்சவத்தில் பள்ளி மாணவர்கள் சுமந்து செல்லும் 63 நாயன்மார்கள் விமானங்கள் சீரமைக்கப்பட்டு வண்ணம் தீட்டும் பணி நடந்தது. கார்த்திகை தீபத்திருவிழா தொடங்குவதற்கு சில தினங்களே உள்ள நிலையில் விழா முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.