திமுக முப்பெரும் விழாவில் அணி திரள்வோம் அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு கரூரில் வரும் 17ம் தேதி நடக்கும்
திருவண்ணாமலை, செப்.13: கரூரில் வரும் 17ம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில், திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பில் அணி திரள்வோம் என அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திமுக முப்பெரும் விழா வரும் 17ம் தேதி கரூரில் நடைபெற உள்ளது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் மற்றும் பண்பாடு, பகுத்தறிவு, சமத்துவம், சமதர்மம், ஜனநாயகம் எனும் கோட்பாட்டுடன் இயங்கும் திமுக தொடங்கிய நாள் மற்றும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள் ஆகிய மூன்றையும் ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழாவாக திமுக கொண்டாடி வருகிறது.
விழாவில், பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. முப்பெரும் விழாவில், திமுகவினர் அனைவரையும் ஒருசேர ஒரே இடத்தில் பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறேன் என்று அழைப்பு விடுத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக் நிர்வாகிகள், அணி சார்ந்த அமைப்பின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் திமுக முன்னோடிகள், கரூர் மாநகர் நோக்கி அணித் திரள்வோம், ஆர்ப்பரிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.