Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தமிழக வேளாண் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்யாற்றில் திதி கொடுத்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்: போலீஸ் குவிப்பால் பரபரப்பு

செய்யாறு, ஆக. 13: தமிழக வேளாண் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆடி அமாவாசைக்கு செய்யாற்றில் விவசாயிகள் திதி கொடுத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். ஆனால் இதற்கு மாறாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாற்றில் புதிய சம்பவம் நடந்துள்ளது. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் வறட்சி பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு தராததை கண்டித்தும், மாநில வேளாண் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திதி கொடுத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

அப்போது செய்யாறில் திதி கொடுத்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததும், சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வேளாண்மை பட்ஜெட்டில் மொத்த செலவு ரூ.4,73,000 கோடியில் மின்துறை ரூ.7,500 கோடி, நெல், கரும்பு, உளுந்து ஊக்கத்தொகை ரூ.2,400 கோடி, காப்பீடு ரூ.658 கோடி, உழவர் பாதுகாப்பு திட்ட நிதி ரூ.150 கோடி, வேளாண் சகோதரத்துறை 3,634 கோடி, என மொத்தம் ரூ.14,984 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில் வேளாண்மை துறைக்கு 100 ரூபாயில் 75 பைசா மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த வேளாண் பட்ஜெட்டை விட இந்த ஆண்டு ரூ.600 கோடி குறைவாக ஒதுக்கீடு செய்துள்ளது. தேர்தல் வாக்குறுதி படி சிறுகுறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, பிற விவசாயிகளுக்கு 50% கடன் தள்ளுபடி, ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையை பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

இதனால் வேளாண்மை வளர்ச்சி மைனஸிற்கு வழி வகுக்கும். உணவு பொருள் உற்பத்தி குறைந்து நுகர்வோருக்கு விலை உயரும் என்பதை சுட்டிக்காட்டியும், செய்யாறு உள்ளிட்ட ஆறுகளில் தடுப்பணை கட்டி நிலத்தடி நீர் உயர நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்தும் செய்யாறு ஆற்றில் விவசாயிகள் திதி கொடுத்தனர். தமிழக வேளாண் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திதி கொடுப்பதால் அங்கு போலீசார் பாதுகாப்பு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.